சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் பணம் கொள்ளை

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலைமீது புகழ்மிக்க முருகன் கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.
தற்போது கோவிலில் ராஜகோபுரம் கட்டப்பட்டு பிரம்மாண்ட மதில் சுவரும் கட்டப்பட்டு அதில் சிற்ப வேலைபாடுகள் நடந்து வருகிறது. பலகோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த கோவிலில் மொத்தம் 9 உண்டியல்கள் உள்ளன. இதில் நிரந்தர உண்டியல்கள் 7–ம், அன்னதான உண்டியல் 1–ம், திருப்பணி உண்டியல் 1–ம் உள்ளன.
கோவிலில் கங்காதரன், சத்தியமூர்த்தி என்ற 2 காவலாளிகள் உள்ளனர். மேலும் ஆட்கள் அங்குதங்கி கோவில் திருப்பணி வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோவிலுக்குள் புகுந்து உள்ளனர். அர்ச்சனை டிக்கெட் கொடுக்கும் இடம் அருகே உள்ள திருப்பணி உண்டியலை அப்படியே பெயர்த்து தூக்கி கொண்டு சென்றனர்.
மலைப்பாதையின் 7–வது சுற்று வளைவில் அந்த உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் அதிலிருந்த ஆயிரக்கணக்கான பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு உடைக்கப்பட்ட உண்டியலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டனர்.
கடந்த மாதம் 21–ந் தேதி சென்னிமலை முருகன் கோவில் உண்டியல்களின் பணம் திறந்து எண்ணப்பட்டது. மொத்தம் உள்ள 9 உண்டியல்களில் 8 உண்டியல்கள் எண்ணி முடிக்கப்பட்டது. மாலை 6 மணி ஆனதால் ஒரேயொரு உண்டியலான திருப்பணி உண்டியல் மட்டும் எண்ண வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த திருப்பணி உண்டியல் கடந்த ஆண்டு 9–வது மாதத்தில் எண்ணப்பட்டது. இதனால் கொள்ளையடிக்கப்பட்ட உண்டியலில் எப்படியும் ரூ.1 லட்சம் குறையாமல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த துணிகரகொள்ளை சம்பவம் பற்றி கோவில் செயல் அலுவலர் பசவ ராஜன் சென்னிமலை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
கோவிலில் உள்ள 2 காவலாளிகளில் நேற்று சத்தியமூர்த்தி என்ற காவலாளிக்கு விடுமுறை. மற்றொரு காவலாளியான கங்காதரன் மட்டும் நேற்று இரவு பணியில் இருந்தார்.
அவர் கூறும்போது, ‘‘நேற்று இரவு கோவிலில் ரவுண்டு வந்தேன். 12 மணிக்கு திருப்பணி உண்டியல் அதே இடத்தில் தான் இருந்தது’’ என்று கூறி னார்.
நள்ளிரவு 12 மணிக்கு பிறகுதான் கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் சென்னிமலை மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது