மதுரை ரிங் ரோட்டில் நள்ளிரவில் காரில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களை சந்திப்பதற்காக மதுரை சிலைமான் கல்மேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது52) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அந்த கும்பல் காரைவிட்டு இறங்கி மாரிமுத்துவிடம் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மாரி முத்துவை கத்தியால் குத்திய கும்பல் காரில் தப்பியது. இது குறித்து சிலைமான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கத்திக் குத்து காயத்துடன் கிடந்த மாரிமுத்துவை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர்.
மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தியதில் அந்த கும்பல் சென்னை நோக்கி காரில் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
கொட்டாம்பட்டி அருகே அந்த கும்பல் சென்ற ஸ்கார்பியோ காரை போலீசார் மடக்கினர். அவர்களை விசாரணைக்காக சிலைமான் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் சென்னையை சேர்ந்த மாய கிருஷ்ணன், முனீஸ்வரன், காளிமுத்து, மதுரையை சேர்ந்த சோனைமுத்து, சரவணன், கார்த்திக் கணேசன் ஆகிய 6 பேரும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மாரிமுத்துவை கத்தியால் குத்தியதாக தெரியவந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
கைதான 6 பேரும் கள்ள நோட்டு கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த பணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது